டிஜிட்டலில் வழக்கு ஆவணங்கள் பதிவேற்ற போலீசாருக்கு பயிற்சி
சென்னை, சென்னையில், குற்ற வழக்குகளை பதிவு செய்யும் போலீசார், அவற்றின் ஆவணங்களை கோப்புகளாக, நீதிமன்றங்களில் நேரடியாக தாக்கல் செய்து வந்தனர். தற்போது, 'டிஜிட்டல்' எனும் மின்னணு மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஆவணங்களை, டிஜிட்டலில் பதிவேற்றுவது குறித்து, போலீசாருக்கான பயிற்சி, வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கமிஷனர் அருண் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திக்கேயன் தலைமையேற்றனர். இதில் நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து, வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருமைசெல்வி, ஆவணங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவது குறித்த வழிமுறையையும், போலீசாரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ''விசாரணை வழக்குகளில் முன்னேற்றம் காண்பதற்கு, சிறந்த முயற்சியாக எடுத்துக் கொண்டு காவல் அதிகாரிகள், நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.