உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றவர் மீது தாக்குதல் போலீஸ்காரர் இடமாற்றம்

போரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றவர் மீது தாக்குதல் போலீஸ்காரர் இடமாற்றம்

போரூர், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நபரை போலீசார் தாக்கிய சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.அய்யப்பன்தாங்கல், வசந்தம் நகரைச் சேர்ந்த சண்முகப்பிரியன், 37. இவர், உடலில் ரத்தக்கட்டு காயங்களுடன், நேற்று முன்தினம் மதியம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார்.மருத்துவர்கள் விசாரித்தபோது, போரூர் போலீசார் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.இது குறித்து போரூர் போலீசார் சண்முகபிரியனியிடம் விசாரித்தனர். அதேநேரம், போலீசாரால் தாக்கப்பட்ட நபரின் உடலில் இருந்த காயங்கள் குறித்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் நேற்று வெளியாயின.விசாரணையில் தெரிய வந்ததாவது:பக்கத்து வீட்டு பிரச்னை காரணமாக, 2ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சண்முகபிரியன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.அப்போது, சண்முகபிரியன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார், காலையில் வந்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.மேலும், அதிகாலை நேரம் என்பதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை, ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மது போதையில் இருந்த சண்முகபிரியன், தன் புகாரை விசாரிக்காததால் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, பணியில் இருந்த போலீசார், அவரை பிளாஸ்டிக் பைபால் அடித்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சண்முகபிரியனை தாக்கிய போலீஸ்காரர் கணேசன் என்பவரை, ஆயுதப் படைக்கு மாற்றி இருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !