பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
பூந்தமல்லி,இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை பணிகள் முழுமையாக முடிந்ததை அடுத்து, மெட்ரோ ரயில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.மூன்றாம் கட்ட சோதனை, நேற்று நடந்தது. இதில், முதற்கட்டமாக போரூரில் இருந்து பூந்தமல்லி வரை, 9.5 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. பின், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை, அதே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கூறியதாவது:பூந்தமல்லி- - போரூர் இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில், மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. துவக்கத்தில், 20 - 25 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில், பின் படிப்படியாக வேகத்தை அதிகரித்து, 60 - 70 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. மெட்ரோ ரயில் முழு வேகத்தில் செல்வதற்கான சோதனை ஓட்டம், விரைவில் நடைபெற உள்ளது.வரும் மாதங்களில், தண்டவாளங்களின் வழித்தடங்கள் மற்றும் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடைபெற உள்ளன.மொத்தம், 9.5 கி.மீ., வழித்தடத்தில், சாலையின் மேல் ரயில் செல்லும் டபுள் டக்கர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது சவாலாக இருந்தது. அந்த பணி, கடந்த மாதம் முடிந்தது.போரூரில் இருந்து வடபழனி வழியாக, பவர் ஹவுஸ் வரை மற்றும் டபுள் டக்கர் பகுதியில் இருந்து கோயம்பேடு வரையிலான பணிகள், அடுத்த ஆண்டு, ஜூலை மாதத்திற்குள் முடியும்.இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.