வடிகால்வாய் பணி அரைகுறை புழுதிவாக்கம் பாதிக்கும் அவலம்
புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், 186வது வார்டு புழுதிவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிகள், பல இடங்களில் அரைகுறையாக விடப்பட்டு, திறந்த நிலையில் உள்ளது.இதனால், வரும் பருவமழையின் போது, தெருக்களில் தேங்கும் மழைநீர், முறையாக வெளியேற வாய்ப்பில்லாமல் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:பாலாஜி நகர், வில்லேஜ் சாலை, அன்னை தெரேசா நகர் 17வது தெரு, ஜி.கே., அவென்யூ, டி.ஆர்.பாலு தெரு உட்பட 40 தெருக்களில், 100 மீ., முதல் 300 மீ., வரை, மழைநீர் வடிகால்வாய் பணிகள் விடுபட்டுள்ளன.பல இடங்கள் 'கல்வெர்ட்' எனும் பாலமும் அமைக்கப்படாமல் உள்ளது. பழைய கால்வாய்கள் மிக மோசமான நிலையில், மண் துார்ந்து காணப்படுகின்றன. முந்தைய காலங்களில் இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டதைபோல், இம்முறை நடக்காமல் இருக்க, தகுந்த முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வெண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.