உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் அதிகார துஷ்பிரயோகம் தி.மு.க., பெண் கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்

சென்னை ; வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தி.மு.க., பெண் கவுன்சிலர் வீடு, வணிக கட்டடங்களை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடத்தை மீட்கக்கோரி, சமூக ஆர்வலர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். சென்னையில் மாநகராட்சியில் கவுன்சிலர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. இதை சரிக்கட்டும் வகையில், திருவொற்றியூர் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், பெருங்குடியைச் சேர்ந்த 189 வது வார்டு கவுன்சிலர் பாபு ஆகிய இருவரும் அதிரடியாக, கவுன்சிலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கவுன்சிலர்கள், தாங்களாக பதவி விலக வேண்டும்; இல்லாவிட்டால் பதவி பறிக்கப்படும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது. ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தி.மு.க., கவுன்சிலர்கள் இஷ்டம்போல் ஆட்டம்போட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் ஒருவர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். சென்னை மாநகராட்சியின், 53வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த பா.வேளாங்கண்ணி. இவர், மூலக்கொத்தளத்தில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 1,200 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, வீடு, கடைகளை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிலத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டுமானம் மேற்கொண்டு வரும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசு நிலத்தை மீட்க வேண்டும் என, சென்னை முழுதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அரசின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஆளுங்கட்சி கவுன்சிலரே இப்படி செய்யலாமா என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையே, மூலக்கொத்தளம் கொள்ளாபுரி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் லோகேஸ்வரி, ராயபுரம் மண்டல அலுவலர் பரிதா பானுவிடம் அளித்த மனு: என் வீட்டில் இருந்து, சி.பி.சாலை வழியாக, என் கணவருடன் இருசக்கர வாகனத்தில் தினமும் உயர் நீதிமன்றம் சென்று வருகிறேன். மாநகராட்சி 53வது வார்டில் உள்ள மூலக்கொத்தளம், சி.பி., சாலையின் இருபுறங்களும் உள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேளாங்கண்ணியின் அனுமதியோடு அமைக்கப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவுன்சிலர் வேளாங்கண்ணி, நடைபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார். இதை மாநகராட்சி அதிகாரிகளும் தட்டிக்கேட்க முடியவில்லை; போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் தினமும் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே, சட்ட விரோத ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வீடு கட்டும் இடத்தையும் மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாமூல் தராததால் பொய் குற்றச்சாட்டு

கடந்த 2001, 2022ம் ஆண்டு என இருமுறை தி.மு.க., கவுன்சிலர் இருந்து வருகிறேன். இருமுறை கவுன்சிலராக இருந்தும், எனக்கு சொந்த வீடுகூட இல்லை. தற்போது, சி.பி.,சாலையில் நான் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இடத்தில் தான், என் பாட்டி காலம் முதல் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறோம். இந்த இடத்தில் ஓலை குடிசையில் வசித்த நிலையில், இருமுறை மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால், தீ விபத்து ஏற்பட்டு குடிசை எரிந்தது. எனவே, பாதுகாப்பு நலன்கருதி, கல்வீடு கட்டி வருகிறேன். இதே வீட்டிற்கு எம்.பி., கனிமொழி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வந்துள்ளனர். நான், 50 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த, 350 சதுரடி இடத்தில் தான் வீடு கட்டி வருகிறேன். அதற்கான குடிநீர் வரி, மாநகராட்சி வரியும் கட்டி வருகிறேன். தற்போது நான் கட்டி வரும் வீட்டிற்கு மாமூல் கேட்டு, என்னை உள்ளூர்வாசிகள் மிரட்டி வருகின்றனர். நான் பணம் தர மறுத்ததால், என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். பொய் தகவல்களை போஸ்டர் அடித்து பரப்பி வருகின்றனர். என் மீது பொய் புகார்கள் கூறி வருபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுப்பேன். - பா.வேளாங்கண்ணி, தி.மு.க., 53வது வார்டு கவுன்சிலர், சென்னை மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ramesh
ஜூலை 22, 2025 13:03

எடப்பாடி 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் கோயில் நிலத்தில் குடி இருப்பவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து விடுவேன் என்று சொன்னதாக ஊடகங்களில் செய்தி வந்து இருக்கிறது


JeevaKiran
ஜூலை 22, 2025 11:45

வுடு வுடு... வரும் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் தலைமையை


Ragupathi
ஜூலை 22, 2025 11:01

உள்ளூர் ரவுடிகள் ஆளுங்கட்சி கவுன்சிலிரிடமே மாமுல் கேட்கிறார்களா என்ன இது உல்டாவா இருக்கே சரி அப்படியே கேட்டாலும் பொறுப்புள்ள மாநகராட்சி உறுப்பினர் அரசிடமும் அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் முறையிட்டு புகார் கொடுத்திருக்கலாமே. இடிக்குதில்ல....


Mani . V
ஜூலை 22, 2025 04:33

விடுப்பா, விடுப்பா திமுக வினர் என்றால் அப்படித்தான். இது போன்ற அயோக்கியத்தனங்களை செய்யவில்லையென்றால், அவர்கள் அந்தக் கட்சியில் இருக்கும் தகுதியை இழந்துவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை