50 மீட்டரில் சுகாதார நிலையம் இருந்தும் 4 கி.மீ., துாரம் கர்ப்பிணியர் அலைக்கழிப்பு
மணலி, மணலி ஆரம்ப சுகாதார நிலையம் 50 மீட்டரில் இருந்தும், 4 கி.மீ., துாரத்தில் உள்ள மணலிபுதுநகர் சுகாதாரம் செல்ல 18ம் வார்டு கர்ப்பிணியர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மணலி மண்டலத்தில், 15 முதல் 22 வரை உள்ள எட்டு வார்டுகளில், 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கர்ப்பிணியர், மாதாந்திர பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார மையங்களுக்கு செல்கின்றனர்.அதன்படி, 19, 20, 21, 22 ஆகிய வார்டு கர்ப்பிணியர், மணலி, பாடசாலை தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கும், 15, 16, 17, 18 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த கர்ப்பிணியர், மணலி புதுநகர், பால் பூத் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.இதில், 18வது வார்டு மணலி ஆரம்ப சுகாதார மையத்திற்கு, 50 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. ஆனால், இவர்கள் 4 கி.மீ., துாரத்தில், முறையான போக்குவரத்து வசதியில்லாத மணலிபுதுநகர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டியதால், அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் கவனித்து, நடவடிக்கைஎடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.அதிக மக்கள் தொகை கொண்ட, 19வது வார்டின் கர்ப்பிணியர் பயன்பெறும் வகையில், மஞ்சம்பாக்கம், நகர்ப்புற மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனை செய்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து மணலி மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கர்ப்பிணியர் அலைக்கழிக்கப்படவில்லை. அடையாள அட்டை பதிந்ததும், கர்ப்பிணியர் எங்கு வேண்டுமானாலும், மாதாந்திர பரிசோதனை செய்துக் கொள்ளலாம்' என்றார்.