சென்னை - புதுடில்லி இடையே தனியார் பார்சல் ரயில் துவக்கம்
சென்னை: சென்னை ராயபுரத்தில் இருந்து, புதுடில்லி பட்டேல் நகருக்கு தனியார், 'பார்சல் ரயில்' சேவை துவங்கப்பட்டு உள்ளது.--ரயில்வேயின் வருவாயை பெருக்க, பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, விளம்பரங்கள் செய்வது, நடுத்தர நிலையங்களில் பார்சல் மையங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராயபுரத்தில் இருந்து புதுடில்லி பட்டேல் நகருக்கு செல்லும் தனியார் பார்சல் ரயில் சேவையை, சென்னை ரயிலை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்ல வசதியாக, தனியார் பங்களிப்போடு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், ராயபுரம் - புதுடில்லி பட்டேல் நகருக்கு பார்சல் ரயிலை இயக்க, ஆறு ஆண்டுகளுக்கு, 52 கோடி ரூபாய்க்கு, 'ரயில் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.வாரத்தில் புதன், ஞாயிறுகளில் இந்த பார்சல் ரயில் இயக்கப்படும். ஒரே நேரத்தில், 353 டன் பொருட்களை ஏற்றிச்செல்ல முடியும். இதன்வாயிலாக, ஆறு ஆண்டுகளுக்கு, 208 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.வாகன உதிரிபாகங்கள், ஆடை, டயர், தோல் பொருட்கள், கூரியர் பொருட்கள் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இது, சிறு, குறு தொழில் வளர்ச்சி ஏற்பட வழி வகுக்கும் என்பதால் உள்ளூர் வியாபாரிகள் பயன் பெறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.