மாநகராட்சி ஆபீஸ் அருகே பார்க்கிங் தனியார் வாகனங்கள் அடாவடி
ஷெனாய் நகர், மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தை சுற்றி, 'நோ பார்க்கிங்' பகுதியில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பகுதிவாசிகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம், 102வது வார்டு, ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூவில் செயல்படுகிறது. இந்த புல்லா அவென்யூ மற்றும் அதை சுற்றியுள்ள, 2, 3வது தெருக்களில் சிலர், அத்துமீறி தனியார் வாகனங்களை நாள் முழுதும் நிறுத்தி வைத்துள்ளனர்.அதேபோல், மூன்று சாலைகளின் சந்திப்பான சென்னை அரசு பள்ளியின் அருகில் இருபுறங்களும், 'ஷேர்' ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வழியாக வந்து சாலையில் திரும்பும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:ஷெனாய் நகரைச் சுற்றி, இந்த பகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். மண்டல அலுவலகத்தை சுற்றி 'நோ பார்க்கிங்' பலகை வைத்திருந்தும், வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன. காலை முதல், இரவு நேரங்களில் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.மேலும், இதேபோல் பல்வேறு இன்னல்களுக்கு குடியிருப்புவாசிகள் ஆளாகின்றனர். மண்டல அலுவலகம் அருகில் இதுபோன்ற அட்டூழியம் நடப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.