உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

சென்னை:தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பான, 'பெப்சி' சார்பில், இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: ஒவ்வொரு தொழிலாளரையும் பணிசெய்ய விடாமல், அவர்களது வருமானத்தை கெடுத்து, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் என, 'பெப்சி' அமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை, சம்பந்தப்பட்ட பெப்சி உறுப்பினர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் சங்க நிர்வாகமுமே பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார இழப்பை, சட்ட ரீதியாக திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், தங்களது படப்பிடிப்பு உள்ளிட்ட எந்தப் பணியையும் நிறுத்தவில்லை. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் மட்டுமே, வேலை நிறுத்தம் செய்கின்றனர். எனவே, பெப்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், தங்களின் பணிகளை தொடர்ந்து நடத்தலாம். பெப்சி உறுப்பினர்கள், படப்பிடிப்பு உள்ளிட்டப் பணிகளுக்கு இன்று வரவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் தங்களது விருப்பம் போல தொழிலாளர்களை வைத்து பணிகளை நடத்திக் கொள்ளலாம். யாரேனும் இடையூறு செய்தால், உடனடியாக சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பெப்சி அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம், சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று காலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை