பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வண்ணாரப்பேட்டை: அக். 23-: அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெறக்கோரி, வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லுாரி பேராசிரியர்கள், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். பின், பேராசிரியர் பாலமுருகன் கூறியதாவது: அரசு உதவி பெறும் கல்லுாரிகளை, தனியார் பல்கலைகளாக மாற்றும் வகையில், இம்மாதம் 15ம் தேதி, தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. இதனால், மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு அரசின் எந்த நிதி உதவியும் கிடைக்காது. தமிழகத்தில் உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கை குறையும். இதனால், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.