உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொத்து வரியுடன் குடிநீர் வரி சேர்த்து வசூலிப்பு இனி ஒரே வரி அக்., 1ல் நடைமுறைப்படுத்த ஆலோசனை

சொத்து வரியுடன் குடிநீர் வரி சேர்த்து வசூலிப்பு இனி ஒரே வரி அக்., 1ல் நடைமுறைப்படுத்த ஆலோசனை

சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் தனித்தனியாக வரி வசூலிப்பதால், நிர்வாக செலவு அதிகரிப்பதோடு, வசூலிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், சொத்து வரியோடு, குடிநீர் வரியையும் சேர்த்து மாநகராட்சியே வசூலிக்கும் நடைமுறையை, அக்., 1 முதல் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு, ஆண்டு வாடகை வருவாய் அடிப்படையில், 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இதில், 23 சதவீதம் மாநகராட்சிக்கு சொத்து வரியாகவும், 7 சதவீதத்தை குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் வரியாகவும் விதிக்கப்படும்.இந்த கட்டணத்தை இரண்டாக பிரித்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.

நோட்டீஸ்

அந்த வகையில், மாநகராட்சியில், 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் வரியாக, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.அதேபோல், குடிநீர் வாரியத்தில், 16.80 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதற்கு, வரி மற்றும் கட்டணமாக, ஆண்டுக்கு, 900 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.ஏப்ரல் மற்றும் அக்டோபரில் நிலுவை இல்லாமல் வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாநகராட்சியில், ஆண்டுக்கணக்கில் வரி செலுத்தாதோருக்கு, 'நோட்டீஸ்' வழங்குவதுடன், 'சீல்' வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், குடிநீர் வாரியத்தில் பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள, வரி, கட்டணத்தை வசூலிக்க, ஒரு துணை கலெக்டர் தலைமையில், ஏழு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், சீல், ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.மாநகராட்சி, குடிநீர் வாரியம் வசூலிக்கும் வரி பணத்தில் இருந்து, ஊதியம், சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.குடிநீர் வாரியத்தில் வரி வசூலிக்க, தலைமை அலுவலக நிர்வாக அதிகாரி முதல் வரி வசூலிப்பாளர் மற்றும் தாசில்தார் வரை, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

அறிவிப்பு

வரி வசூலில் குறிப்பிட்ட தொகை, இவர்களுக்கு ஊதியமாக செல்வதால், சிக்கன நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் வாரிய குடிநீர் வரியை சேர்த்து, ஒரே வரியாக வசூலிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.நடப்பு 2025 - 26ம் நிதியாண்டில், இரண்டாம் அரையாண்டு துவக்கமான, அக்., 1 முதல் நடைமுறைக்கு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கட்டடத்தின் மாநகராட்சி வரி, குடிநீர் வரி விதிப்புக்கான சொத்து மதிப்பை மாநகராட்சி நிர்ணயம் செய்கிறது. இதன்படி, 30 சதவீத வரியில், வாரியம் 7 சதவீதம் வசூலிக்கிறது. இந்த வரியை பொதுமக்களிடம் இருந்து வசூலிப்பதில் பெரிய போராட்டமாக இருக்கிறது.இதனால், 30 சதவீத வரியை மாநகராட்சி வசூலித்து, அதில், 7 சதவீதத்தை வாரியத்திற்கு வழங்கும் வகையில், மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், வாரியத்தின் செலவுகள் குறையும். குடிநீர் கட்டணத்தை மட்டும் வாரியம் வசூலிக்கும்.வரி வசூலில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களுக்கு மாற்று பணி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சொத்து வரி, குடிநீர் வரியை இணைத்து, ஒரே வரியாக வசூலிக்கும்போது ஏற்படும் சாதகம், பாதகம், சீல், ஜப்தி நடவடிக்கையில், இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் என, 200 வரி வசூலிப்பாளர்கள் இருக்க வேண்டும். தற்போது, 100க்கும் குறைவானவர்கள்தான் உள்ளனர். வார்டுக்கு ஒரு வரி வசூலிப்பாளர் இருந்தால், ஒரே வரியாக வசூலிப்பது எளிது. பல ஆண்டுகள் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்க, வாரியம் தனியாக தாசில்தார்கள் கொண்ட குழு அமைத்துள்ளது. மாநகராட்சியில் அதுபோல் இல்லை. நிலுவை தொகையை வசூலிக்க, சுதந்திரமாக செயல்படும் அதிகாரிகள் குழு இருந்தால், ஒரே வரியாக வசூலிப்பது சாத்தியம்.- மாநகராட்சி அதிகாரிகள்

ஒரே வரி விதிப்பால் என்ன நிகழும்?

பழைய நடைமுறை1. இரு துறைகளுக்கும் தனித்தனி காசோலை அல்லது வரைவோலை வழங்க வேண்டும் 'ஆன்லைன்' வழியாக செலுத்தும்போதும் தனித்தனியாக கட்டணம் தரப்படுகிறது.2. வரி செலுத்திய பணம் வரவில் சேராதது, வசூலில் குளறுபடி போன்ற புகார்களுக்கு, இரண்டு அலுவலகத்திற்கும் தனித்தனியாக செல்லும் நிலை உள்ளது3. வங்கி கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக, மாநகராட்சிக்கு வரி செலுத்தி, குடிநீர் வரியை செலுத்தாமல் பலர் ஏமாற்றி வருவது தடுக்கப்படும்4. வரி செலுத்த வேண்டிய தகவலை, இரு துறைகளும் தனித்தனியாக நினைவூட்டல் கடிதம், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'வாட்ஸாப்' செய்தி வழியாக தகவல் பரிமாறுகிறது புதிய நடைமுறை1. ஒரே வரியாக செலுத்தும்போது, வங்கி பரிவர்த்தனை கட்டணம் குறையும்; காகித செலவு, ரீஜார்ட் செலவு குறையும்2. மாநகராட்சியை அணுகி தீர்வு காணலாம்3. முறையாக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்; நிலுவை தொகை எளிதாக வசூலாகும்

முதல் முறையாக ரூ.2,020 கோடி வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 2024 - 25ம் நிதியாண்டில், சொத்துவரி வசூலிக்க, 1,900 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2,020 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் பானுசந்திரன் கூறியதாவது:சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக, 2,020 கோடி ரூபாய் சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியை பொறுத்தவரையில், 500 கோடி ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நேற்று வரை, 570 கோடி ரூபாய் தொழில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்த வரி வசூலில் பெரும்தொகை, 2,231.21 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுகிறது. வரும் நிதியாண்டில், 2,020 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.சொத்துவரி செலுத்தாத, 100 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, 'க்யூ.ஆர்., குறியீடு' வாயிலாக எளிதாக சொத்து வரி செலுத்த வழி வகை செய்ததால், வரி வசூல் இலக்கை தாண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
ஏப் 01, 2025 12:02

எனக்கு தெரிந்து பலர் ஆயிரக்கணக்கில் சொத்துவரி பாக்கி வைத்துள்ளனர் பில்கலக்டருக்கு கையூட்டு கொடுத்து விடுகின்றனர்


Sridharan Venkatraman
ஏப் 01, 2025 11:14

ஒருவர் இறத்து விட்டால் அரசு பென்சன் கொடுப்பதில்லை. வாரிசுகள் இறந்தவர் பற்றி அறிவிக்க வேண்டும். அதே போல இறந்தவர் பெயரில் சொத்து இருத்தல் கூடாது. அவர் பெயரில் வரி வசூலிக்கக் கூடாது. ஒருவருடம் அவகாசம் தந்து, இதை முறைப் படுத்தக் கூடாதா ?


N Srinivasan
ஏப் 01, 2025 10:28

இது சட்டப்படி தவறு. தண்ணீர் வரி என்பது சேவை சம்பந்தப்பட்டது. அரசு அந்த சேவை சரிவர பொதுமக்களுக்கு தராமலேயே வரி வசூல் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றமே தாமாக முன்வந்து பொதுமக்கள் நலன் கருதி விசாரிக்க வேண்டும்.


V GOPALAN
ஏப் 01, 2025 10:03

Fifty percent of chennai there is no water or drainage facility. We are paying huge amount 5000 to remove from septic tank once in 6 months. Let this govt provide facility and collect. Annamalai should help poor and middle class people


முக்கிய வீடியோ