உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்றவர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்றவர் கைது

ஆவடி, காட்டுப்பாக்கத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக விற்று ஏமாற்றிய முதியவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்தவர் மகாதேவன், 70. இவர், கடந்த 2006ல் வீட்டு மனை தேடிய போது, ஜெயராஜ், 72, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது, 1,200 சதுர அடி உடைய, சி.எம்.டி.ஏ.,வால் அங்கீகரிக்கப்பட்ட நிலம் இருப்பதாக கூறிய ஜெயராஜ், 3 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை மகாதேவனுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். நிலத்தை வாங்கிய மகாதேவன், அங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2024ல், மகாதேவன் வீடு கட்டி வசிக்கும் இடம், அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் எனக்கூறி, காலி செய்யுமாறு, குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாதேவன், இது குறித்து ஜெயராஜிடம் கேட்டுள்ளார். நிலத்திற்கான பணத்தை திருப்பி தருவதாக, ஜெயராஜ் கூறியுள்ளார். ஆனால், இதுவரை பணத்தை திருப்பி தரவில்லை. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இதையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாதேவன், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், அரசு நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக விற்று மோசடியில் ஈடுபட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ