ஏரி, நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கிய தண்ணீர் இறைப்பு
வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள ஏரி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நீரை, இறைக்கும் பணி நடந்து வருகிறது.சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு மதுரவாயல் -- ஆலப்பாக்கம் சாலையில், ஆலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்து, 4 ஏக்கராக சுருங்கியுள்ளது.கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின் போது, இந்த ஏரி நிரம்பி வழிந்து, 146, 147, 144, 148, 149 ஆகிய வார்டுகள் பாதிக்கப்பட்டன. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் மழைநீர் வடிகாலில், 100 மீட்டர் துாரத்திற்கு இணைப்பு இல்லை.கடந்த ஆண்டு பெய்த மழையிலும், ஏரி நிரம்பி வழிந்தது. சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் மின் மோட்டார் அமைத்து, குறிப்பிட்ட அளவிற்கு நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.அதேபோல், வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகரில் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. கடந்த ஆண்டு இந்த நீர்ப்பிடிப்பு பகுதி நிரம்பி வழிந்ததால், அதை சுற்றி உள்ள பகுதிகளில், ஐந்து நாட்களுக்கும் மேல் மழைநீர் தேங்கியது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நீரை குறிப்பிட்ட அளவிற்கு இறைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதனால், அடுத்து வரும் மழையில் ஆலப்பாக்கம் ஏரி மற்றும் வளசரவாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் பாதிப்பை குறைக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.