புரட்டாசி முடிந்த முதல் ஞாயிறு இன்று; மீன் மார்க்கெட்களில் குவிந்த மக்கள்
சென்னை; புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிறான இன்று, மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.கடந்த ஆங்கில மாதம் 17ம் தேதி புரட்டாசி தமிழ் மாதம் பிறந்தது. எனவே, அசைவ பிரியர்கள் பலரும் அசைவம் உண்பதை தவிர்த்தனர். புரட்டாசி மாதம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. நேற்று முதல் ஐப்பசி மாதம் பிறந்தது. புரட்டாசி மாதம் என்பதால் கறி, மீன் என அசைவ உணவை தவிர்த்த உணவு பிரியர்கள் இன்று மாமிசக்கடைகளிலும், மீன் மார்க்கெட்டுகளிலும் குவிந்தனர். குறிப்பாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் வழக்கத்துக்கு மாறாக அதிக கூட்டத்துடன் காணப்பட்டது.புரட்டாசி முடிந்த முதல் ஞாயிறு என்பதால் மீன்களின் விலையிலும் மாற்றம் காணப்பட்டது. அதன்படி சென்னை காசிமேட்டில் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. வாவல் ஒரு கிலோ ரூ.900, சங்கரா ஒரு கிலோ ரூ.450க்கும் மக்கள் வாங்கிச் சென்றனர். கடலூர் மீன் சந்தையிலும் மக்கள் அதிகளவில் குவிந்தனர். அங்கு வஞ்சரம் ரூ.800, சங்கரா ரூ.400, கொடுவா ரூ.450க்கு விற்பனையானது.