சென்னை பல்கலை மகளிர் கபடி ராணிமேரி கல்லுாரி முதலிடம்
சென்னை, சென்னை பல்கலை மண்டல மகளிர் கபடி போட்டியில், ராணிமேரி கல்லுாரி முதலிடத்தை தட்டிச் சென்றது. சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல மகளிர் கபடி போட்டி, நேற்று முன்தினம், அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில் நடந்தது. இதில், 'ஏ' மண்டலத்திற்கு உட்பட, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லுாரி அணி, 42 - 22 என்ற புள்ளி கணக்கில், செல்லம்மாள் அணியை தோற்கடித்தது. எஸ்.ஐ.டி.டி., மற்றும் ராணிமேரி கல்லுாரி அணிகள் இடையேயான மற்றொரு அரையிறுதிபோட்டி, 41 - 41 என்ற புள்ளி கணக்கில் 'டிரா'வில் முடிந்ததால், 'டை - பிரேக்கர்' சுற்று நடந்தது. விறுவிறுப்பான 'டை - பிரேக்கர்' ஆட்டத்திலும், இரு அணிகளும் திறமையாக விளையாடியதில், 5 - 5 என்ற புள்ளி கணக்கில் மீண்டும் 'டிரா'வில் முடிந்தது. பின், 'கோல்டன் டை பிரேக்' ஆட்டத்தில், 1 - 0 என்ற கணக்கில், ராணிமேரி கல்லுாரி அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், ராணிமேரி கல்லுாரி அணி, 42 - 30 என்ற புள்ளிக் கணக்கில், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லுாரி அணியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது.