சென்னையில் மழை பாதிப்பு 14.8 லட்சம் பேருக்கு உணவு
சென்னை, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட, 14.8 லட்சம் பேருக்கு, அரசு வாயிலாக உணவு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு வெளியிட்ட அறிக்கை:சென்னைக்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மா உணவகங்களில், 16, 17ம்தேதிகளில் இரண்டு நாட்கள் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மழை காரணமாக வேலைக்கு செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக இருந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில், காலையில் இட்லி, பொங்கல்; பகலில் கலவை சாத உணவும் வழங்கப்பட்டது. காலை மற்றும் இரண்டு வேளை சேர்த்து, 78,557 பேர் உணவை பெற்று பயன் அடைந்தனர். மாலையில், 28,316 பேருக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாக்க, 300 நிவாரண மையங்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு, தேவையான உணவு, உடை குடிநீர் வழங்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட 14.8 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டது.சென்னையில், 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில், 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஆகியோர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.