சென்னை: ஆவடியில், நேற்று காலை 10:00 முதல் இடைவிடாத கனமழை பெய்தது. இதன் காரணமாக, சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராம், இந்து கல்லுாரி, ஆவடி கவரப்பாளையம் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.திருமுல்லைவாயில், குளக்கரை சாலை முதல் விவேகானந்தா பள்ளி வரை 700 மீட்டர் துாரத்திற்கு சி.டி.எச்., சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. விவேகானந்தா பள்ளி அருகே முட்டி அளவுக்கு சாலையில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மாவட்ட கிளை நுாலகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மழைநீர் வடிகால் முறையாக துார்வாராததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. காமராஜர் நகர், கணபதி தெருவில் குடியிருப்பைச் சுற்றி மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கியது. அங்கு வசிப்போர் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். ஆவடி அடுத்த சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதை அருகே, சி.டி.எச்., சாலையில் தேங்கிய மழைநீர் நேற்று காலை முதல் மோட்டார் வாயிலாக வெளியேற்றப்பட்டது.ஆவடி பேருந்து நிலையம் ஒட்டியுள்ள வடிகாலை ஆக்கிரமித்து சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. இதனால், சி.டி.எச்., சாலையில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆவடி பேருந்து நிலையத்திற்குள் வெள்ளம் போல் பாய்ந்தது. இதனால், முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கியது. போதுமான நிழற்குடைகளும் இல்லாததால், பயணியர் மழைக்கு ஒதுங்க முடியாமல் அவதிப்பட்டனர். கொரட்டூர் வீட்டு வசதி வாரியம், பட்டரைவாக்கம், அம்பத்துார் தொழிற்பேட்டை, ஓ.டி., பேருந்து நிலையம், கள்ளிகுப்பம், மாதனாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.அம்பத்துார் மண்டல அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அம்பத்துார் காவல் நிலையம் எதிரே, டன்லப் மைதானத்தில் நிறுத்தியிருந்தனர். அவை, மழை வெள்ளத்தில் சிக்கி சேதமாகி வருவதாக, உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.பெரம்பூர் கழிவுநீரேற்று நிலைய மோட்டார் பழுதானதால், மழைநீர் வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழைநீரால் சூழப்பட்டு, பெரம்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.நெல்வயல் சாலையில் மழைநீரோடு குப்பையும் சேர்ந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.மாதவரம் 30வது வார்டில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயால் எந்த பயனும் ஏற்படவில்லை. தண்ணீர் செல்ல வழியில்லாததால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு, சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. பெரவள்ளூர் காவல் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து கீழ்தளத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை, போலீசார் மேல்தளத்திற்கு கொண்டு சென்றனர்.நிரம்பிய கோவில் பதாகை ஏரி
ஆவடி அடுத்த கோவில் பதாகை ஏரி, 570 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி நிரம்பியதால், அதன் உபரிநீர் கன்னடபாளையம், கணபதி அவென்யூ, கோவில் பதாகை பிரதான சாலையில், முட்டிக்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆவடி அடுத்த திருநின்றவூரிலும் தண்ணீர் தேங்கியது.