குடிநீர் வினியோகம் குறைந்தது குரோம்பேட்டையில் பாதிப்பு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதிகளில், பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.எஞ்சியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர்.மூன்றாவது மண்டலத்தில் அடங்கிய, 35வது வார்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் மெட்ரோ குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.தற்போது வெயில் துவங்கியுள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், அதுவும் குறைந்த நேரத்திற்கு மட்டுமே வருகிறது. அந்த தண்ணீர் குடிப்பதற்கும் உகந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இப்படியே போனால், ஏப்ரல், மே மாதங்களில், வினியோகிக்கும் நேரம் இன்னும் குறைந்து, மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, தடையின்றியும், சரியாகவும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.