உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.63.72 கோடியில் சீரமைப்பு

நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.63.72 கோடியில் சீரமைப்பு

சென்னை, சென்னையில் நடைபாதையில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் தடுக்கவும், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 63.72 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதைகள் சீரமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், 387.35 கி.மீ., நீளமுள்ள பேருந்து தட சாலைகளை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில், பெரும்பாலான சாலைகளின் இரு பக்கங்களிலும், பாதசாரிசாரிகளுக்கான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான நடைபாதையில் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், சாலையும், நடைபாதையும் சம உயரத்தில் இருப்பதால், சாலை விபத்துகளும் நடைபெற்று வருகிறது.இவற்றை தவிர்க்கும் வகையில், மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நடைபாதையை சீரமைக்கப்படுவதுடன், அவற்றில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:சென்னையில், பெரம்பூர் நெடுஞ்சாலை, கிரீம் சாலை, பின்னி சாலை, டாம்ஸ் சாலை, எத்திராஜ் சாலை உள்ளிட்ட, 31 சாலைகளில், 20.7 கி.மீ., நீளத்திற்கு, 24.16 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதைகள் அமைக்கப்படும். தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதி வாயிலாக, அவ்வை சண்முகம் சாலை, பத்மாவதி சாலை, கான்ரான்ஸ்மித் சாலைகளில், 1.8 கி.மீ., நீளத்தில் 7.28 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதைகள் மேம்படுத்தப்பட உள்ளன.அதேபோல், 16 சாலைகளில், 14.3 கி.மீ., நீளத்தில் உள்ள, சுகாதார நடைபாதைகள் 26.61 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.மேலும், பல்வேறு நடைபாதைகளில் உள்ள சிறு, சிறு பழுதுகள் 5.67 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். அதன்படி, 63.72 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு இடங்களில் நடைபாதைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை