உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் அமைக்கப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை: ஐகோர்ட்

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் அமைக்கப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை: ஐகோர்ட்

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையைச் சேர்ந்த 'கிரீன் கேர்' என்ற அமைப்பின் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நகரில் பழமையான மீன் அங்காடி உள்ளது. 'சிங்கார சென்னை - 2.0' என்ற திட்டத்தின் கீழ், தற்போது 14 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், சிந்தாதிரிப்பேட்டையில் வரவிருக்கும் நவீன மீன் அங்காடியும் ஒன்று.தற்போதுள்ள சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடிக்கு பதில், 1,022 சதுர அடியில், 2.92 கோடி ரூபாய் செலவில், 102 கடைகளுடன் புதிய நவீன மீன் அங்காடி அமைக்கும் பணி 2023ல் துவங்கியது.கட்டுமான பணி முடிந்து, கடந்த 7ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அங்கு கழிவுநீரை பதப்படுத்த சுத்திகரிப்பு நிலையம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல வசதிகள் அமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஆனால், அங்கு திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்படவில்லை. மீன் அங்காடியில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவால், சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு ஏற்ப, பெரியளவில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. முறையற்ற மீன் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.மீன் கழிவு கூவம் நதியில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும். மீன் அங்காடியில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு டிச., 12ல் அளித்த விண்ணப்பத்துக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை.உரிய பாதுகாப்பு, சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, கடந்தாண்டு டிச., 4ல் அளித்த கோரிக்கை மனுவுக்கும் பதிலும் இல்லை.நவீன மீன் அங்காடியில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்திய பிறகே, நவீன மீன் அங்காடியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள், வாகன நிறுத்தங்கள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, ஜூன் 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ