நெமிலிச்சேரி - தாம்பரம் சிற்றுந்து இயக்க கோரிக்கை
குரோம்பேட்டை, பல்லாவரம், குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்கு பகுதியில், ராதா நகர், நெமிலிச்சேரி, அஸ்தினாபுரம், ஜமீன் ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இவர்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனை, காவல் நிலையம், கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி., சாலை அல்லது மேடவாக்கத்திற்கு செல்ல வேண்டும்.உட்புற பகுதிகளில் இருந்து குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கத்திற்கு செல்ல போதிய வசதி இல்லை. ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களையே நம்பியுள்ளனர்.இப்பகுதி மக்களின் வசதிக்காக, மேடவாக்கம் - ராதா நகர் ரயில்வே கேட் வரை, தடம் எண்: 's9' என்ற சிற்றுந்து இயக்கப்பட்டது.மேடவாக்கத்தில் புறப்பட்டு, நன்மங்கலம் - நெமிலிச்சேரி - ராதா நகர் வந்தடையும். மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோருக்கு மிகவும் வசதியாக இருந்த சிற்றுந்தை, நிறுத்திவிட்டனர்.தற்போது, குரோம்பேட்டை - மேடவாக்கம் இடையே, 's4' என்ற சிற்றுந்து இயக்கப்படுகிறது.இந்த சிற்றுந்து, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் புறப்பட்டு, எம்.ஐ.டி., மேம்பாலம், எம்.டி.சி., பணிமனை சாலை, ராதா நகர் - நெமிலிச்சேரி வழியாக, மேடவாக்கத்திற்கு செல்கிறது.ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்குவதால், எந்த நேரத்தில் வருகிறது, எந்த நேரத்தில் செல்கிறது என்பது, பொதுமக்களுக்கு சரியாக தெரியவில்லை. இதை பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வாங்குகின்றனர்.அதனால், ராதா நகர் - மேடவாக்கம் மற்றும் அஸ்தினாபுரம் வழியாக, நெமிலிச்சேரி - தாம்பரம் வரை போதிய சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, 2 - 3 மண்டல குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்கினால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலை மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் மிகவும் பயனடைவர் என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.