செயின் பறிக்க முயற்சி வாலிபருக்கு காப்பு
தாம்பரம், தாம்பரம் அருகே செயின் பறிக்கும் முயற்சியை தடுத்த பெண்களை தாக்கிய வாலிபர், கைது செய்யப்பட்டார். தாம்பரம், சானடோரியம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி, 34. இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்த விஜயலட்சுமி, 35, என்பவரை பார்க்க, நேற்று முன்தினம் சென்றார். பெருங்களத்துார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் தெருவில், இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். விஜயலட்சுமி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் விஜயலட்சுமியை சரமாரியாக தாக்கினார். தடுக்க முயன்ற விஜியையும் தாக்கி அந்த நபர் தப்பினார். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெண்களை தாக்கியது பெருங்களத்துார், காமராஜர் நகரைச் சேர்ந்த சத்யா, 23, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.