உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணிக்காக அகற்றிய சதிக்கல் மீட்பு

மெட்ரோ பணிக்காக அகற்றிய சதிக்கல் மீட்பு

சென்னை, மெட்ரோ ரயில் பணிக்காக, பூந்தமல்லி நீதிமன்றம் - ஹோலிகிரசன்ட் பள்ளிக்கு இடையில், நெடுஞ்சாலை ஓரமாக வழிபாட்டில் இருந்த இரண்டு சதிக்கல்லை பணியாளர்கள் அகற்றி, சாலையோரத்தில் வைத்திருந்தனர்.வரலாற்று ஆய்வாளர்கள் அளித்த தகவலின்படி, வருவாய்துறையினர் சதிக்கல்களை மீட்டு, தாசில்தார் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.இவற்றை, தமிழக தொல்லியல் துறையின் திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டு ஆய்வாளர் லோகநாதன், காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, உமாசங்கர் கூறியதாவது:தமிழகத்தில், நாயக்கர்காலத்தில்தான் சதிக்கல்வைக்கும் பழக்கம் அதிகரித்தது. ஊருக்காக உழைத்த வீரனோ, தலைவனோ இறந்தால், அவன் உடல் எரியூட்டப்படும்போது, மனைவியும் தீயில் பாய்ந்து, உயிரை மாய்த்துக் கொள்வார்.பின், அவர்களின் உருவத்தை கல்லில் பதித்து, மக்கள் தெய்வமாக வழிபடுவர். இந்த வழிபாட்டு கல்லை சதிக்கல் என்பர்.அந்தவகையில், பூந்தமல்லியில் இரண்டு சதிக்கல்கள்மீது, சிறிய மாடம் அமைத்து வழிபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இவை, 18ம் நுாற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த கலையம்சத்துடன் உள்ளன. இரண்டு கற்களிலும், ஆண் உடை வாள் வைத்துள்ளார். பெண்களின் உடையலங்கார அமைப்பை ஆய்வு செய்ததில், அது நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. ஒரு சிலையில் உள்ள துவக்க கால தெலுங்கு எழுத்துகளை ஆய்வு செய்துவருகிறோம்.இந்த சிலை குறித்த அறிவிப்பை, மாவட்ட கலெக்டர் வெளியிடுவார். உரிமை கோருவாரிடம் விசாரிப்பார். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால், அவை அரசுடைமை ஆக்கப்பட்டு, மாவட்ட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ