சென்னை, மாதவரம் சாலையை,'மில்லிங்' செய்யாமல், இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறை சீரமைத்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, வடக்கு உள்வட்டச் சாலையில் மஞ்சம்பாக்கத்தில் இணைகிறது.இது, 6 கி.மீ., துாரம் கொண்டது. சென்னை விரிவாக்கப் பகுதி மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் பிரதான சாலையாக, இது உள்ளது.சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்கள், மணலியில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், இச்சாலையில் அதிக அளவில் பயணித்து வருகின்றன. இந்த சாலை 'மிக்ஜாம்' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்தது. இதை தற்காலிகமாக சீரமைக்க, 1 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, ஒரு மாதம் ஆனது. ஆனாலும், சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத் துறை துவக்காமல் இருந்தது.திட்ட மதிப்பீட்டின்படி, வடகரை முதல் கிராண்ட்லைன் வரை, 200 மீட்டருக்கு சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.இதற்காக, 'மில்லிங்' எனப்படும் சாலையை சுரண்டும் பணி செய்து, பழைய தார் கலவையை அகற்றி இருக்க வேண்டும். அதன் பின் தான், புதிய சாலை அமைக்க வேண்டும்.ஆனால், நேற்று முன்தினம் இரவோடு இரவாக, பள்ளங்களில் கூழாங்கற்களை நிரப்பி, ரோலர் வாகனத்தால் சரி செய்து, பழைய சாலையின் மீது ஆங்காங்கே தார் ஒட்டு போடப்பட்டு உள்ளது.இந்த புதிய ஒட்டு, பெயர்ந்து வரும் அளவிற்கு உள்ளது. மேலும், சாலையில் இருந்த மண் துகள்களும் அகற்றப்படாமல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் அறிவிப்பு நெருங்கிய நிலையில், அரசு உத்தரவை மீறி,'மில்லிங்' செய்யாமல் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு நிதி 1 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது.நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தலுக்காக விதியை பின்பற்றாமல் சாலை அமைத்த ஒப்பந்த நிறுவனம், தொடர்புடைய அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.