கழிப்பறைகள் இடிக்க எதிர்ப்பு கொண்டித்தோப்பில் சாலை மறியல்
கொண்டித்தோப்பு, சென்னை கொண்டித்தோப்பு, வடக்கு சுவர் சாலையில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக, குடியிருப்பின் எதிரில், மாநகராட்சி சார்பில் கழிவறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. மொத்தம், 20 குளியலறை, கழிவறைகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இப்பகுதியில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த கழிவறைகளை இடிக்க, அதிகாரிகள் நேற்று, 'பொக்லைன்' இயந்திரங்களுடன் வந்தனர். கழிவறைகளை இடிக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'குடியிருப்புவாசிகள் கழிவறைகளை பயன்படுத்தி வரும் நிலையில், இவற்றை இடித்தால் நாங்கள் எங்கு போவோம்.மாற்று இடத்தில் கழிவறை கட்டித்தரும் வரை, இவற்றை இடிக்கக்கூடாது' என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திடீரென, வடக்கு சுவர் சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஏழுகிணறு போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கழிவறை இடிக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.