கோவில் சுவர் ஏறிகுதித்து உண்டியல் உடைத்து திருட்டு
கிண்டி, கிண்டியில் கோவில் சுவர் ஏறிக்குதித்து, உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரில், சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அர்ச்சகர் சிவமணி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் சாவி இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் சிதறி கிடந்தது.இது குறித்த புகாரின்படி, கிண்டி போலீசார் விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்த்தபோது, அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர், கோவில் சுவர் ஏறிக்குதித்து, உண்டியல் அருகே இருந்த கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்துவிட்டு திருடியது தெரியவந்தது.இக்கோவிலுக்கு, கடந்த 2023ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பின், இரு ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படவில்லை என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் திருடு போயிருக்கலாம் எனவும், கோவில் நிர்வாகிகள் கூறினர்.