போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி கைது
சென்னை;கொலை வழக்கில் தலைமறைவாகி, போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை, அயனாவரம் அருகே, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கர்ணா என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரித்த சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார், அயனாவரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த தீபக் உட்பட சிலரை கைது செய்தனர். பின், நீதிமன்ற ஜாமினில் தீபக் வெளியே வந்தார். ஆனால், அல்லிக்குளம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார், இதையடுத்து குற்றவாளி தீபக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த மாதம் 14ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.