உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1,500 லஞ்சம்: எஸ்.ஐ.,க்கு 5 ஆண்டு

ரூ.1,500 லஞ்சம்: எஸ்.ஐ.,க்கு 5 ஆண்டு

சென்னை, மாநகராட்சி துப்புரவு ஊழியரிடம், 1,500 ரூபாய் லஞ்சம் பெற்ற, முன்னாள் சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.----- சென்னை வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 40; மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம், 2007ல் வட்டிக்கு, 10,000 ரூபாய் வாங்கினார். மாதம் 1,000 ரூபாய் வீதம், 18 மாதங்கள் பணம் செலுத்தினார். கூடுதலாக, 8,000 ரூபாய் கூடுதலாக செலுத்திய பிறகும், அசல் பணத்தை திரும்பித் தருமாறு, செல்வம் கேட்டார்.பணம் தர மறுத்ததால், பணத்தை பெற்றுத் தருமாறு வண்ணாரபேட்டை போலீசில், கந்து வட்டிக்காரர் செல்வம் புகார் செய்தார். இதை, சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார் விசாரித்து, பிரேம்குமாரிடம் இருந்து, 10,000 ரூபாயை வாங்கி, செல்வத்திடம் கொடுத்தார். கடன் பத்திரம், ஆவணங்கள் சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமாரிடம் இருந்தது. அதைத் தர வேண்டும் என்றால், 1,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, அவர் கேட்டுள்ளார். ஏற்கனவே, 28,000 ரூபாய் கொடுத்துவிட்டதால் விரக்தியடைந்த பிரேம்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீசார் அறிவுரைப்படி, 2011 பிப்.,4ல் லஞ்சப் பணத்தை பிரேம்குமார் கொடுத்தபோது, சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமாரை கையும், களவுமாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி