உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதியில் விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

பாதியில் விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

ராமாபுரம் :ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் துவங்கப்பட்டு பாதியில் விடப்பட்ட மழைநீர் வடிகாலை இணைக்க சென்னை மாநகராட்சி சார்பில், 8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.வளசரவாக்கம் மண்டலம் ராமாபுரத்தில், திருவள்ளுவர் சாலை உள்ளது. இச்சாலை வளசரவாக்கம், ராமாபுரம், மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை தற்போது, மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.வளசரவாக்கம் மண்டலம் 152, 154 மற்றும் 155வது வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இச்சாலையில் உள்ள மழை நீர் வடிகால் வழியாக அடையாற்றில் கலக்கிறது.இச்சாலையில் ஒருபுறம், நெடுஞ்சாலை துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த மழைநீர் வடிகால், பல இடங்களில் முறையாக இணைப்பு இல்லாமல், உடைந்த நிலையில் இருந்தது.கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில், இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி மழை நீர் வடிகால் துறை சார்பில், திருவள்ளுவர் சாலையில் வளசரவாக்கம் -- ராமாபுரம் செல்லும் பாதையில் இடதுபுறம் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு பெய்த பருவ மழையின் போதும், இச்சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, 3 கி.மீ., துாரம் உள்ள சாலையில், நந்தம்பாக்கம் கால்வாய் வரை, 2.6 கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலை துறை சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2022 ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.இதில், ராமாபுரம் அரச மரம் சந்திப்பு வரை 1.5 கி.மீ., துாரம் வரை, மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டு, பழைய மழை நீர் வடிகாலில் இணைக்கப்பட்டது. தற்போது, இச்சாலை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி சர்பில், 1,091 மீட்டர் துாரத்திற்க விடுபட்ட பகுதியில் 7.9 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்து நந்தம்பாக்கம் கால்வாயில் இணைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. நெடுஞ்சாலை துறை சார்பில் 2.4 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க 20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணி நிறைவு பெறவில்லை. தற்போது, விடுபட்ட பகுதியை இணைக்க, மீண்டும் 8 கோடி ரூபாய் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த மழைநீர் வடிகால் பணியை வரும் மழைக்காலத்திற்கு முன் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ***********


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை