உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாதாரண பேருந்தில் ரூ.5,000; ஏசியில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி

சாதாரண பேருந்தில் ரூ.5,000; ஏசியில் ரூ.10,000 வசூல்... கட்டாயம் எம்.டி.சி., கெடுபிடி உத்தரவால் தொழிலாளர்கள் அதிருப்தி

சென்னை : பேருந்துகளின் வகைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு '�ப்ட்'டுக்கும் இவ்வளவு தொகையை கட்டாயம் வசூலிக்க வேண்டும் என, சென்னை போக்குவரத்து கழகம் இலக்கு நிர்ணயம் செய்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 650 வழித்தடங்களில் தினமும், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், 32 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.சென்னையின் எல்லைப் பகுதி நாளுக்குள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர், குன்றத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும், மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும் சில வழித்தடங்களில், பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக, பயணியர் புலம்புகின்றனர். இதை கருத்தில் வைத்து, பல்வேறு மாற்றங்களை, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், பேருந்துகளின் வகை மற்றும் வழித்தடத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு பேருந்துக்கும் வசூல் தொகையை, எம்.டி.சி., நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. அனைத்து கிளை மேலாளர்களுக்கும், மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை மற்றும் புறநகரில் தினமும், 3,233 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பேருந்துகளின் எரிபொருள் செலவு மற்றும் பணியாளர் சம்பளத்திற்கான தொகையைக்கூட ஈட்ட இயலவில்லை.இதனால், டீசல் கொள்முதல், பணியாளர்களின் சம்பளம் மற்றும் பிற பணப் பலன்கள் வழங்குவதில், பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.எனவே, ஒவ்வொரு பணிமனையிலும் பேருந்து இயக்க துாரம், வருவாய் ஆகியவற்றை கணக்கீடு செய்து, வருவாய் இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும். இதனால், அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், ஒவ்வொரு பணிமனையிலும், பேருந்து இயக்கம் மற்றும் டிக்கெட் வருவாய் பெருக்கத்தில் தனிக்கவனம் செலுத்த வேணடும்.அதேபோல், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயக்கத்தை, 100 சதவீதம் உறுதிப்படுத்துவதுடன், டிக்கெட் வருவாயையும் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை செயலர் காமராஜ் கூறியதாவது:மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், மாணவர்கள் உட்பட 50 வகையான பாஸ்கள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. அதுபோல், 1,000 ரூபாய் பாஸ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.இதனால், நடத்துநர் வழியேயான நேரடி வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருப்பது, ஓட்டுநர், நடத்துநருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இலவச பாஸ்களுக்கான மானியத் தொகையை, தமிழக அரசிடம் இருந்து வாங்க, போக்குவரத்து கழகங்கள் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'வருவாயை பெருக்கும் நோக்கில், அனைத்து பேருந்துகளையும் இயக்கவும், வசூலை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வருவாய் இலக்கிற்காக யாரையும் கட்டாயப்படுத்தவில்லை' என்றனர்.

வருவாய் இலக்கு எவ்வளவு?

மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண கட்டணம் - 1,654 பேருந்துகள்; சொகுசு - 1,355 பேருந்துகள்; விரைவு - 28 பேருந்துகள்; 'ஏசி' - 50 பேருந்துகள், சிற்றுந்துகள் - 146 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து வகை, இயக்கப்படும் கி.மீ., துாரத்துக்கு ஏற்றார்போல், வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு சாதாரண கட்டண பேருந்து - 5,000 ரூபாய்; சிற்றுந்து - 6,000 ரூபாய்; சொகுசு பேருந்துகளில் 7,000 ரூபாய்; 'ஏசி' பேருந்துகளில் 10,000 ரூபாய் வரை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 18:38

இலவசம் என்றொரு ஆணியை வைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள் , ஆண்களிடம் பிடுங்கிய பணத்தை பெண்களுக்கு கொடுக்கிறார்கள் , அதுகூட புரியாம அந்த பெண்கள் என்று எனது கணவர் புலம்புகிறார் , நிஜத்தில் நான் வெளியே அதிகம் போவதில்லை , எனது கணவர் தான் பேருந்தில் அடிக்கடி பயணம் செய்வார் , பாவம் ஆண்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 04, 2025 10:21

ரோட்டுல நடந்து போறவங்க ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் பைக் ஆகியவற்றில் போறவங்களை எல்லாம் வலுக்கட்டாயமா இழுத்துப்பிடித்து பஸ்ஸுக்குள் ஏற்றி டிக்கட் வாங்க வைக்கலாம்


vbs manian
ஏப் 04, 2025 09:28

கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அவசியமா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 04, 2025 10:19

நாலு கை நிறைய சம்பளமும் அதுக்கு மேல கிம்பளமும் வாங்குற எம் பிக்களுக்கு கணக்கற்ற முறை இலவச விமானப்பயணம் அவசியமான்னு கேட்கலாமே


Sivagiri
ஏப் 04, 2025 09:28

ஏர் இந்தியாவை விற்றது போல போக்குவரத்துக்கு கழகங்களை - அதன் முந்தய முதலாளிகளான - டிவிஎஸ் - ஏபிடி - ஆகியோரிடம் விற்று விடலாம். கட்டணம் - பெர்மிட் - போன்றவற்றை மட்டும் அரசு கவனிக்கலாம் - . . மக்களுக்கு நல்ல பேருந்துகளும் , பயணங்களும் கிடைக்கும் . . .


Ethiraj
ஏப் 04, 2025 08:48

Accountability to staff is welcome move.


Rajarajan
ஏப் 04, 2025 06:10

என்னதான் அரசு நிறுவனங்களை சிறிது லாபத்தில் இயக்கினாலும், அது உடனே ஊதிய உயர்வு, அதீத சம்பளம், சலுகை, போனஸ், ஓய்வூதியம் மற்றும் படிகள் சலுகைகளாக மாறி, மீண்டும் மீண்டும் நஷ்டத்தில் தான் செல்லும். எனவே தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்துவிட வேண்டும். காலத்திற்கொவ்வாத துறைகளை இழுத்து மூடவேண்டும். கிளிப்பிள்ளையை வைத்து, இழவு கொண்டாட கூடாது.


முக்கிய வீடியோ