ரிப்பன் மாளிகை அருகே திரண்ட துாய்மை பணியாளர்கள் கைது
சென்னை, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிப்பன் மாளிகையில் நேற்று திரண்ட துாய்மை பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை மேலாண்மை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மண்டலங்களில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் பணி பாதுகாப்பு இல்லை, ஊதியமும் குறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், 650 துாய்மை பணியாளர்கள் நேற்று ஒன்று கூடினர். மேயரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம் என்ன தீண்டாமை சுவரா, உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். நாங்கள், 71 நாட்களாக வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறோம். மாநகராட்சியில் பழையப்படியே வேலை கொடுங்கள் அல்லது புழல் சிறையில் அடைத்து விடுங்கள். தொடர்ந்து எங்களை அலட்சியப்படுத்தினால், துாய்மை பணியாளர் பெண்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். மேயர் பிரியா கூறுகையில், ''பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கேட்டு, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; அதை நிறைவேற்றிவிட்டோம். கோரிக்கை மனுவுடன், ரிப்பன் மாளிகை வருவதாக துாய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை,'' என்றார். ஆணையத்துக்கு வசதிகள் செய்து தர கோர்ட் உத்தரவு துாய்மை பணியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் மீது, போலீசார் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என, துாய்மை பணியாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, 'ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை அரசு செய்து தர வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை அக்., 17க்கு, நீதிபதிகள் அமர்வு தள்ளிவைத்தது.