அம்மனுக்கு சாற்றிய சேலை ரூ.ஒரு லட்சத்திற்கு ஏலம்
திருவேற்காடு, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சாற்றப்பட்ட சேலைகள், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. திருவேற்காடில் பிரசித்தி பெற்ற, தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தவிர, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி அம்மனுக்கு சாற்றப்பட்ட சேலைகள், கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டன. கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள், அம்மனை தரிசித்த பின், ஏலத்தில் ஆர்வமுடன் பங்கேற்று, சேலைகளை வாங்கினர். ஒவ்வொரு சேலையும், 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.