எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் துவக்கம்
சென்னை:எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், தமிழக அரசால் துவக்கப்பட்டுள்ளது.உலக ரத்த தானம் செய்வோர் தினம், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1,000 ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம், 100 அரசு பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி, 50 கல்லுாரிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' திட்டம் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், தமிழக மாநில ரத்த பரிமாற்ற குழும திட்ட இயக்குனர் சீத்தாலட்சுமி, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:'எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 7,618 குழந்தைகளுக்கு, உதவித் தொகை வழங்க 1.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பால்வினை நோய் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 50 கல்லுாரிகளில் புதிதாக 'ரெட் ரிப்பன் கிளப்' உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக, 11 துவக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினருக்கு, எச்.ஐ.வி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. ரத்ததானம் செய்யும் வாழ்நாள் சாதனையாளர்களை கவுரவிக்க, விருதுகளுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் எங்களுக்கு விருது வழங்கவில்லை எனக் கூறியுள்ளனர்.துறை இயக்குனர் சீத்தாலட்சுமி, மாவட்ட அளவில், கணக்கெடுப்பு நடத்தி யார், யார் தொடர்ந்து எத்தனை முறை ரத்ததானம் செய்திருக்கின்றனர் என முழுமையாக ஆய்வு செய்வார். விடுபட்டவர்களுக்கு அக்டோபர் மாதம் நடக்கும் விழாவில், விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை மருந்து போதிய அளவில் இருப்பு இல்லை என்பது தவறான தகவல். அரசு மருத்துவமனைகளில் எந்தவிதமான மருந்துக்கும் தட்டுப்பாடு இல்லை. அனைத்து அவசியமான மருந்துகளும், போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.