உபரிநீரை வெளியேற்ற முடியாமல் தத்தளிக்கும் சீக்கனா ஏரி
முடிச்சூர்: முடிச்சூர் சீக்கனா ஏரியில், உபரிநீரை வெளியேற்றக் கூடிய கலங்கல் பகுதியில், நீர் வெளியேற தடையாக செடி, கொடிகள் முளைத்துள்ளன. தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், சீக்கனா ஏரி உள்ளது. இந்த ஏரி, 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்த போது, சாலை பணிக்காக, ஏரியின் மையப்பகுதியில் இருந்து, 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், ஏரியின் ஒருபுறம் 13 ஏக்கர், மறுபுறம் 4 ஏக்கர் என, இரண்டாக பிரிந்தது. ஒவ்வொரு மழையிலும், இரு பகுதிகளும் மழைநீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறுவதால், பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இரு பகுதிகளாக பிரிந்துள்ள ஏரிகளை துார்வாரி, ஆழப்படுத்தி மழைநீர் தேக்கி வைக்க வேண்டும் என, அவ்வூராட்சி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள ஏரியை, சி.எம்.டி.ஏ., நிதி, 9.60 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, பெய்து வரும் மழையில், ஏரி நிரம்பி வருகிறது. ஆனால், கலங்கல் பகுதியில் செடி, கொடிகள் மூடியுள்ளதால், தண்ணீர் வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. தற்போது மிதமான நிலையில் மழை பெய்து வருவதால், இப்பிரச்னை தெரியவில்லை. அதிக அளவில் மழை பெய்து உபரிநீர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், தண்ணீர் தடைபட்டு மேல் நோக்கி சென்று, குடியிருப்புகளை சூழ்ந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் கலங்கல் பகுதியை சீரமைத்து, தண்ணீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.