ஆவடியில் செல்பி பாயின்ட் வீணாகும் மக்கள் வரிப்பணம்
ஆவடி, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, 2020ல் 2.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ஐ லவ் ஆவடி' என, 'செல்பி பாயின்ட்' மற்றும் நீரூற்று பூங்காக்கள் அமைக்கப்பட்டன.கொரோனா தொற்று பரவலை தடுக்க, அதே ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திறக்கப்பட்ட இரண்டே வாரத்தில் இந்த பூங்கா மூடப்பட்டது. பின், ஊரடங்கை காரணம் காட்டி, ஆவடி மாநகராட்சி பராமரிப்பு பணிகளையும் மறந்து போனது.நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், 2021 - 22 பொது நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நீரூற்றுக்கு பக்கவாட்டு சுவர் மற்றும் சிறு மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகும் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி உள்ளது.நகரை அழகுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' அருகே தெருவோர டிபன் கடைகள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டும், பேனர்கள் வைக்கும் இடமாகவும் மாறி வருகிறது.தற்போது, அரசமரம் அதில் தழைத்து வளரத் துவங்கி உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டமைப்புகள் அமைத்தாலும், அதிகாரிகள் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாததால், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.