உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஸ்தினாபுரம் மழைநீர் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவு கலப்பு நாசமாகி வரும் செம்பாக்கம் ஏரி

அஸ்தினாபுரம் மழைநீர் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவு கலப்பு நாசமாகி வரும் செம்பாக்கம் ஏரி

குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. முறையாக பராமரிக்காததால், குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஓடுவது தொடர் கதையாகிவிட்டது.பல்லாவரம் நகராட்சியாக இருந்த போது, முறையாக திட்டமிடாமல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், வினோபாஜி நகர், 11வது தெருவில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யாமல், அங்கு மோட்டாரை பொருத்தி, கழிவுநீரை இறைத்து, அருகே செல்லும் மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது.மழை காலத்தில், சானடோரியம் பச்சைமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜி.எஸ்.டி., - ரயில்வே லைனை கடந்து, நேரு தெரு, அரிதாஸ்புரம் பிரதான சாலை, திரு.வி.க., நகர் பிரதான சாலை, வினோபாஜி நகர் வழியாக, செம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.அந்த கால்வாயில், பாதாள சாக்கடை கழிவை மோட்டார் வாயிலாக இறைத்து, அப்பட்டமாக விடும், 3வது மண்டல அதிகாரிகளின் செயலுக்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலர் எம்.ரவி, 62, கூறியதாவது:செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக, சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 2017ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை.அப்படியிருக்கையில், தற்போது மாநகராட்சி நிர்வாகமே பாதாள சாக்கடை கழிவை, மோட்டார் வாயிலாக இறைத்து, மழைநீர் கால்வாயில் விடுகிறது. அது, அப்படியே செம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.ஏற்கனவே, கழிவுநீர் கலந்து ஏரி தண்ணீர் நாசமாகி, அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் பரவி வருகின்றன.இதன் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டமிடாமல் போடப்பட்டது என்பது உண்மையாகியுள்ளது. மக்களை காக்க வேண்டிய மாநகராட்சியே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை