உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 165 இடங்களில் அமையுது சென்சார் சிக்னல் வசதி

165 இடங்களில் அமையுது சென்சார் சிக்னல் வசதி

வாகன போக்குரவத்துக்கேற்ப, தானாக போக்குவரத்து சிக்னல்கள் மாற்றிக்கொள்ளும் வகையில், சென்சார் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை, அடுத்தாண்டு குடியரசு தினத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வசதியாக, 300 போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சிக்னல்கள், ரிமோட் வாயிலாக இயக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.தற்போது, சென்னை காவல் துறை, மாநகராட்சியுடன் இணைந்து, 500 கோடி ரூபாய் செலவில், 165 இடங்களில், வாகன போக்குவரத்துக்கேற்ப, தானாக சிக்னல்களை மாற்றியமைத்துக் கொள்ளும் கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த பணியில், எல் அண்டு டி., நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது: சென்னையில் முதல் முறையாக, 165 இடங்களில் சென்சார் கேமரா அடிப்படையில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த சிக்னலில், சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா அமைக்கப்படும்.வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, சென்சார் கேமரா வழிகாட்டுதலின் படி, சிக்னல்கள் தாமாக மாறிக்கொள்ளும். போக்குவரத்து போலீசார் இயக்க வேண்டிய அவசியம் இல்லை.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், இதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன.வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக, 115 இடங்களில், 230 நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.விபத்தை கண்டறியும் வகையில் 58 இடங்களிலும், சிக்னல் விதிமீறலை கண்டறிய 50 இடங்களிலும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்றிய 11 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.பேருந்து பயணியர் வசதிக்காக, சென்னையில் இயக்கப்படும், 2,940 பேருந்துகளின் தகவல்கள் அறியும் விதமாக, 616 இடங்களில் டிஜிட்டல் பலகை அமைக்கப்பட உள்ளது.வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 'ஆம்புலன்ஸ் வருகிறது; வழிவிடுங்கள்' என்று அறிவுறுத்தவும், 17 இடங்களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட உள்ளன.தற்போது, இத்திட்டம் அமலாகும் சாலைகளில் உள்ள சிக்னலில், கம்பங்கள் அமைக்கும் பணி முடிந்து, அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து தர, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த வசதி அடுத்தாண்டு குடியரசு தினமான, ஜன., 26ல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. வெளிநாடுகளுக்கு இணையாக, இத்திட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை அமலாகியுள்ள

தொழில்நுட்ப வசதிகள் சென்னை போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் குறித்து கண்டறிய, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தி, சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்தல் மற்றும் அது தொடர்பான குறுஞ்செய்தியை மொபைல் போனுக்கு அனுப்பும் திட்டம் வந்தது.

எந்தெந்த சாலைகளில்?

ஈ.வெ.ரா., சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு, 100 அடி சாலை, ஜி.எஸ்.டி.,சாலை, ஜி.என்.டி.,சாலை, எண்ணுார் விரைவு சாலை உட்பட, 165 சாலைகளில் சென்சார் வாயிலாக இயங்கும் தானியங்கி சிக்னல் திட்டம் அமலுக்கு வர உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி