டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை 71 படுக்கைகளுடன் தனி வார்டு
சென்னை:சென்னை அரசு மருத்துவமனைகளில், 71 படுக்கைகளுடன் 'டெங்கு' காய்ச்சல் சிகிச்சைக்காக, சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 'டெங்கு' காய்ச்சல் அதிகமாகி வரும் நிலையில், சென்னை மருத்துவமனைகளில், அதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்ச்சல், கடும் தலைவலி, குமட்டல், வாந்தி, ரத்தப்போக்கு உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன், தினமும் 20 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு, தனி அறையில் சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கொசு வலைப்பின்னலுடன் கூடிய வார்டு, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளில், 71 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அரசு டாக்டர்கள் கூறியதாவது: சென்னை மருத்துவமனைகளில், தற்போது ஸ்டான்லியில் 8 பேர்; ராஜிவ்காந்தியில் 2 பேர் என, 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். உடனடியாக சிகிச்சை பெற்றால், டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை மருத்துவமனைகளில், தற்போது ஸ்டான்லியில் 8 பேர்; ராஜிவ்காந்தியில் 2 பேர் என, 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். உடனடியாக சிகிச்சை பெற்றால், டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தடுக்க முடியும். - அரசு டாக்டர்கள்