உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொட்டிவாக்கத்தில் கழிவுநீர் வெளியேற்றம்

கொட்டிவாக்கத்தில் கழிவுநீர் வெளியேற்றம்

கொட்டிவாக்கம்,பெருங்குடி மண்டலம், வார்டு 181க்கு உட்பட்டது கொட்டிவாக்கம். இங்கு, பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ஏ.ஜி.எஸ்., காலனியில் பல வீடுகளும், காந்தி தெருவில் அனைத்து வீடுகளும் விடுபட்டன.எனவே, ஏ.ஜி.எஸ்., காலனி, காந்தி தெருவில் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர், கழிப்பறை நீர் வெளியேற்ற 12 செ.மீ., விட்டம் உடைய குழாய், 500 மீ., துாரத்திற்கு பொருத்தப்பட்டு, அருகில் உள்ள கடலில் கலக்கும்படி, மாநகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது.ஆனால், காந்தி தெருவின் மேடான பகுதியில், கழிவுநீர் வெளியேற வழியின்றி, மீண்டும் குடியிருப்பு பகுதியில் தேங்கியது.இதையடுத்து, காந்தி தெருவில், நான்கு கிரவுண்ட் காலி இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கழிவுநீரை தேக்கி, அங்கிருந்து தினம் ஒரு மணி நேரம், மோட்டார் வைத்து வெளியேற்ற, மாநகராட்சியே ஊழியரை நியமித்தது.தவிர, கொட்டிவாக்கம், கடற்கரை பகுதியில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர், கழிப்பறை நீர் கடலில்தான் கலக்கிறது.இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று படங்களுடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, காலை 9:00 மணிக்கு, தி.மு.க., கவுன்சிலர் விஸ்வநாதன், அதிகாரிகளுடன் நேரில் சென்று, கழிவுநீர் தேங்கியிருந்த தனியார் நிலத்தை ஆய்வு செய்தார்.பின், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நிலத்தில் தேங்கியிருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன; கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'தினம் இரு வேளை, மோட்டார் வைத்து கழிவுநீர் வெளியேற்றி, அருகில் உள்ள வடிகால் வாயிலாக கடலில் விடப்படும். கொட்டிவாக்கம் கடற்கரை அருகே, 'பம்பிங் ஸ்டேஷன்' அமைக்கப்பட உள்ளது. அந்தப் பணி முடிவடையும்போது, கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ