சாலையில் கழிவுநீர் வெளியேற்றம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் உள்ள மழைநீர் வடிகால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. அத்துடன், சந்தையின் 'பி' சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனால், கோயம்பேடு சந்தை காய்கறி மொத்த விற்பனை அங்காடி அருகே, 'ஈ' சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறி வளாகத்தில் தேங்கிய கழிவுநீரை, மின் மோட்டார் வாயிலாக உணவு தானிய அங்காடி அருகே சாலையில் விடப்பட்டது. இதனால், அச்சாலை வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கூறுகையில், 'மெட்ரோ ரயில் பணியால், மழைநீர் வடிகாலில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் தடை உள்ளது. எனவே, மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள தண்ணீரை, மின் மோட்டார் வாயிலாக அகற்றினோம்' என்றனர்.