கழிவுநீர் குளமான சின்ன போரூர் அண்ணா சாலை: மக்கள் அவதி
சின்ன போரூர்,:சின்ன போரூர் அண்ணா சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூரில், அண்ணா சாலை உள்ளது. இது, நெசப்பாக்கம், ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை. கடந்த டிச., 10ல், அண்ணா சாலை மற்றும் மருத்துவமனை சாலை சந்திப்பில், 8 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் வாரிய ஊழியர்கள், குடிநீர் குழாயை சீர் செய்தனர். கடந்த 15ம் தேதி மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. அத்துடன், இரு கடைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மீண்டும் கழிவுநீர் கசிந்து, அண்ணா சாலையில் குளம் போல் தேங்கி வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பாதசாரிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.