கழிவுநீர் உந்து நிலைய குழாய் சேதம் நெற்குன்றம் பகுதி கிணறுகளில் கலப்பு
நெற்குன்றம், நெற்குன்றம் வள்ளியம்மை நகர் கழிவுநீர் உந்து நிலையத்தில் கழிவுநீர் குழாய் உடைந்துள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலந்துள்ளாதல் பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் வள்ளியம்மை நகரில் குடிநீர் வாரிய, கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. நெற்குன்றத்தில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து வரும் கழிவுநீர், இந்த உந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. நெற்குன்றம் 145 மற்றும் 148 வது வார்டில் சில பகுதிகளில் சமீபத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு மழையில் வள்ளியம்மை நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் வெளியேறும் குழாய் உடைந்தது. இதையடுத்து, அந்த குழாய் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு. தற்போது கடந்த மாதம் பெய்த மழையில், அதே கழிவுநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் குழாய்கள் மீண்டும் உடைந்தன. தற்போது, மின் மோட்டார் வாயிலாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், நெற்குன்றம் பகுதியில் உள்ள சாலையில் பல இடங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. அதேபோல், நெற்குன்றம் அன்னம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலந்து கிணற்று தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பகுதி மக்கள் கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில், லாரியில் குடிநீர் வழங்குகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீர் வாரிய லாரி தண்ணீர் போதுமானதாக இல்லை என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, கழிவுநீர் உந்து நிலையத்தில் உடைந்த குழாய்களை விரைவில் சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.