குடிமகன்களின் கூடாரமாகும் ஷெனாய் நகர் தண்ணீர் பந்தல்
அமைந்தகரை, கோடை வெயிலின் தாக்கத்தின் போது, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில், சாலையோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டன. இது மக்களுக்கும் பெரிதும் உபயோகமாக உள்ளது.ஆனால், பெரும்பாலான தண்ணீர் பந்தல்கள் கோடை முடிந்து அகற்றப்படாமல் உள்ளன. இதில் சில இளைஞர்கள் கூட்டம் சேர்ந்து அரட்டை அடிக்கும் இடமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தவகையில், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அமைந்தகரை, ஷெனாய் நகரில் புல்லா அவென்யூவில் உள்ள தண்ணீர் பந்தலும் உள்ளது.இங்குள்ள தண்ணீர்பந்தல், தற்போது தி.மு.க.,வினர் அரட்டை அடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. அதேபோல், இரவு வேளைகளில் மது அருந்தும் இடமாகவும் மாறி வருவதாக, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் சிலர், மண்டல அலுவலகத்திற்கு வாய்மொழி புகார் அளித்தும், கட்சியினரின் அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.