இளம்பெண் புகார் எஸ்.ஐ., சஸ்பெண்ட்
சென்னை, தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், அங்குள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், 'தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன், 30, என்பவர் தன்னை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பதிவு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ஆயுதப்படையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்தது.இதனால், பணிக்காக அவர் சென்னை சென்றுவிட்டார். அங்கு சென்றதும், என்னை ஒதுக்கி, கைவிட்டு விட்டார். அவரை தேடி சென்னைக்கு சென்றபோது, துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதனிடையே, பூவரசன் மீது வழக்கு பதிந்த தகவல் கிடைத்த நிலையில், ஆயுதப்படை துணை ஆணையர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பூவரசனை சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டுள்ளார்.