உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை சித்ரவதை செய்து கொன்று கால்வாயில் வீசிய ஆறு பேர் சிக்கினர்

வாலிபரை சித்ரவதை செய்து கொன்று கால்வாயில் வீசிய ஆறு பேர் சிக்கினர்

சென்னை:குப்பையில் இருந்து பழைய பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த வாலிபரை, கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியும், மொட்டை அடித்து சித்ரவதை செய்தும் கொன்ற தனியார் தொழிற்சாலை உரிமையாளரின் மகன் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த காட்டுநாயக்கன் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 26. இவரது மனைவி விஜயலட்சுமி, 24. இவர்களுக்கு, ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. மணிமாறன் சாலையோரம் கிடக்கும் பழைய பிளாஸ்டிக், இரும்பு, அட்டை பொருட்களை சேகரித்து, விற்று பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த புதன்கிழமை நள்ளிரவாகியும், இவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள், மணிமாறனை தேடி அலைந்துள்ளனர். அப்போது, கோனிமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை அருகே, அவரை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று உறவினர்கள் விசாரித்தபோது, 'தொழிற்சாலையில் புகுந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மணிமாறன் திருடி சென்றுள்ளார். 'அதை தந்தால் மட்டுமே, அவரை விடுவோம்' என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, எல்லையம்மன்பேட்டையில் உள்ள கால்வாயில், மணிமாறன் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற செங்குன்றம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 'மணிமாறனை விசாரித்து, உடனே அனுப்பி வைத்தோம்' என, தொழிற்சாலையில் இருந்தோர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது: தொழிற்சாலை பகுதியில் சாலையோரம் பொருட்களை சேகரித்து கொண்டிருந்த மணிமாறனை, திருட வந்ததாக நினைத்து, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், அவருக்கு மொட்டை அடித்து, சித்ரவதை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து உயிரிழந்த மணிமாறனை, 'யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது' என, கால்வாயில் வீசி விட்டு, எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகினர். போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், செங்குன்றம் அருகே பொத்துாரில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், கொலையாளிகளை கைது செய்தனர். அவர்கள், தொழிற்சாலை உரிமையாளரான செங்குன்றம் அடுத்த பொத்துாரைச் சேர்ந்த கலிலுார் ரஹ்மான், 59, அவரது மகன் சையத் பரூக், 34, மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களான தி.நகரைச் சேர்ந்த அப்துல் மாலிக், 40, செங்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், 27, அசோக்குமார், 29, மற்றும் செல்வகுமார், 36, என்பது தெரிய வந்தது. ஆறு பேரையும் கைது செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, மூன்று சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை