டிரைவர் கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் சிறை
சென்னை, சென்னை, கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர், மந்தைவெளியில் உள்ள, தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றினார்.இவரோடு, ஓட்டுநராக பணியாற்றிய தாம்பரம் சானடோரியத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், நிறுவனத்தின் வாகனங்களை சர்வீஸ் செய்யும் பணிகளையும் கவனித்தார்.முறைகேட்டில் ஈடுபட்டதாக, பணியில் இருந்து கண்ணன் நீக்கப்பட்டார். அதற்கு, பாபு தான் காரணம் என, கருதிய அவர், கூலிப்படையினரை வைத்து, பாபுவை கொலை செய்து, கொடைக்கானலுக்கு உடலை எடுத்து சென்று, மலைப்பகுதியில் வீசினர். 2010 ஜூனில் இந்தச் சம்பவம் நடந்தது. மகனை காணவில்லை என, பாபுவின் தந்தை அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணைக்கு பின், பாபுவின் உடலை கொடைக்கானல் மலையில் இருந்து மீட்டனர். பாபு கொலை வழக்கில், உடந்தையாக தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக், கண்ணன், பல்லாவரம் விஜயகுமார், ஜான், வேளச்சேரி செந்தில் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை, இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தஸ்னீம் விசாரித்தார். முன்விரோதம் காரணமாக, திட்டமிட்டு நடந்த கொலையில், கருணை காட்ட முடியாது எனக்கூறி, குற்றஞ் சாட்டப்பட்ட தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும், 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபராத தொகையில், 10 லட்சம் ரூபாயை, கொலை செய்யப்பட்ட பாபுவின் பெற்றோருக்கு வழங்கவும், நீதிபதிஉத்தரவிட்டார்.சவால்கள் நிறைந்த வழக்குவிசாரணை அதிகாரி பெருமிதம்பாபு கொலை வழக்கு விசாரணை சவாலாக இருந்தது. குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக், நிறுவன மேலாளர் கண்ணன், விஜயகுமார் உள்ளிட்ட ஆறு பேரும் பாபுவை முதலில், குரோம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கடத்திச் சென்றனர். அங்கு, அடித்துக் கொன்றனர். பாபுவை தாக்கியவர்களில் கண்ணணும், விஜயகுமாரும் கொடூரமாக செயல்பட்டுள்ளனர். பாபுவின் உடலை கார் டிக்கியில் அடைத்து, கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசிவிட்டனர். பாபுவின் ரத்தக்கரை படித்த உடைகள், தேனி மாவட்டம், பெரிய குளத்தில் கைப்பற்றினோம். அது தான் கொலை என்பதை உறுதி செய்தது. குற்றவாளிகளில் இருவர் தந்தை, மகன் என்பதை மரபணு சோதனை நடத்தி உறுதி செய்ய வேண்டி இருந்தது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்து இருப்பது, இரவு, பகலாக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய போலீசாரின் புலன் விசாரணையை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.