தாயை அடித்து கொன்ற மகன் கைது
மாதவரம், ஆத்திரத்தில் தாக்கியதில் தாய் இறந்ததால், மகன் கைது செய்யப்பட்டார். மாதவரம், பொன்னியம்மன்மேடு, திருப்பதி தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் பரிமளா, 60. சில ஆண்டுக்கு முன் இவரது கணவர் செல்வராஜ் உடல்நிலை சரியின்றி இறந்தார். பரிமளாவின் ஒரே மகன் ரூபக், 35, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாதம் இருமுறை சென்னை வந்து, தாயை பார்த்து செல்வார். கடந்த ஒன்றாம் தேதி, பரிமளாவை பார்க்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பணம் விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரூபக், தாயின் முடியை பிடித்து சுவற்றில் தள்ளியுள்ளார். இதனால் தலையில் காயமடைந்த பரிமளா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த பரிமளா, நேற்று இறந்தார். இதையடுத்து மாதவரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ரூபக்கை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.