மாநகராட்சி கயிறு இழுத்தல் போட்டி மழைநீர் வடிகால் துறை முதலிடம்
சென்னை, மார்ச் 21--சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில், துறைகளுக்கு இடையிலான கயிறு இழுத்தல் போட்டி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.போட்டியில், மாநகராட்சியின் பல துறைகளில் இருந்து, இருபாலரிலும், மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் துறை முதலிடத்தையும், நான்காவது மண்டல அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.அதேபோல், பெண்களுக்கான போட்டியில், நிலம் மற்றும் உடைமைகள் துறை முதலிடத்தையும், பொது சுகாதாரத் துறை இரண்டாமிடத்தையும் பிடித்தன.தடகளம், 100 மீ., ஓட்டத்தில், 35 வயது பிரிவில், ஸ்டேடியம் துறை அணி ராஜேஷ்குமார்; 50 வயது பிரிவில், நான்காவது மண்டலம் அருண்ராஜ்; 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் மாநகராட்சி தலைமை அலுவலகம் கலைவாணன் ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.பெண்களில் 100 மீ., ஓட்டத்தில், 13வது மண்டலம் சோபானா; 49 வயதில் 14வது மண்டலம் சாந்தி; 50 வயது மேற்பட்டோர் பிரிவில் மத்திய வட்டார அலுவலகம் சாந்தி ஆகியோர் முதலிடங்களை வென்றனர். தொடர்ந்து, 25ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.