ஒலிம்பிக் அகாடமியில் ரூ.3 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் திறப்பு
சென்னை, சென்னை ஒலிம்பிக் அகாடமியில், விளையாட்டு அறிவியல் மையத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். சென்னை, பெரியமேடு, நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியன் மூன்றாம் தளத்தில், மூன்று கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். வீரர்களின் செயல்திறன், உடற்பயிற்சி, ஆரோக்கியம், உடலியல், உளவியல் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியாளர்கள் மற்றும் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த மையம் வாயிலாக, விளையாட்டு வீரர்களுக்கு, போட்டி நடக்கும் நாடுகளின் சுற்றுச்சூழல், அதற்கேற்ற உடல் தகுதி, மன வலிமை மற்றும் உளவியல் ரீதியான தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட உள்ளது.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, ராஜகண்ணப்பன், சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்யமிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.