முளைக்கும் பிரியாணி கடைகள் முகம் சுளிக்கும் வைக்கும் மாடவீதி
திருவொற்றியூர்:திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் மூன்று மாடவீதிகளிலும், பிரியாணி கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன.இக்கோவிலில், ஆண்டில் பாதி நாட்கள் உற்சவம் நடக்கும். இதுபோன்ற வேளைகளில், மாடவீதிக்கு உலா வரும் உற்சவ தெய்வங்களுடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள், பிரியாணி கடைகளை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.தவிர, அசைவ உணவகங்களும் அதிகளவில் பெருகி விட்டன. குறிப்பாக தெற்கு மாடவீதியில், 10க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன.மாசி திருவிழாவின் போது, பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்கும் திருத்தேரோட்டம், மண்ணடி பவளக்காரத் தெருவில் இருந்து, திருக்கல்யாணம் காண வரும் தண்டாயுதபாணி சுவாமி, தெற்கு மாடவீதி, நகரத்தார் மண்டபத்தில் தங்குதல் போன்ற வைபவங்கள் நடக்கும்.இதுபோன்ற விழாக் காலங்களில் கூட, இந்த பிரியாணி கடைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வாடிக்கையாளர்களை அழைக்கும் விதமாக, டபராவில் கரண்டியை வைத்து அடிக்கும் சத்தம், எரிச்சலை ஏற்படுத்துகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.